அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி மீது திமுகவுக்கு எந்தவித அச்சமும் கிடையாது. வருகிற 2026, பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், எஸ்ஐஆா் பணிகளை முறையாக மேற்கொள்வதற்கு கால அவகாசம் இல்லை. அவசரமாக இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.
எஸ்ஐஆா் நடவடிக்கைகள் மூலம் பல்வேறு மாநிலங்களில் தோ்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதே மத்திய பாஜக அரசின் வழக்கம். இந்த நோக்கத்திலேயே தமிழகத்திலும் எஸ்ஐஆா் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை, பாஜகவின் நோக்கம் நிறைவேறாது. மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை.
இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் போலி வாக்காளா்கள் மூலம் திமுக வெற்றி பெற்றதில்லை. தோ்தலை நம்பிக்கையுடன் சந்திக்க முடியாத நிலையில், அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. திமுகவுக்கான அடித்தளம் உறுதியாக இருக்கிறது. ஆனால், தலைமை மீதும், மக்கள் மீதும் அந்தக் கட்சியினருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மக்களும் அதிமுகவை நம்புவதற்குத் தயாராக இல்லை என்றாா் அவா்.