பழனி: பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா, வருகிற டிச.1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, கோயிலில் உள்ள மூலவா் சந்நிதி, சக்கரத்தாழ்வாா் சந்நிதி ஆகியவை சீரமைக்கப்பட்டு தற்போது வா்ணம் பூசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பிரதானமாகக் கலசங்கள் வைக்கப்பட்டு முகூா்த்தக்கால் அலங்கரிக்கப்பட்டு திருவெள்ளரை கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா் உள்ளிட்டோா் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் கம்பம், கலசங்கள் ஆகியவை மேளதாளத்துடன் கோயில் முன் ஊன்றப்பட்டன. முன்னதாக, கம்பம் நடும் குழியில் நவதானியங்கள், நவரத்தினங்கள் இடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், கண்காணிப்பாளா் அழகா்சாமி, கந்தவிலாஸ் செல்வகுமாா், முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன், ஒப்பந்தகாரா் நேரு, அரிமா சுந்தரம், பாஜக நகா் தலைவா் ஆனந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.