தூய்மைப் பணியாளா்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் ஆறுச்சாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தூய்மைப் பணியாளா்களுக்கான நலத் திட்ட உதவிகளை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு நகராட்சி ஆணையா் டிட்டோ தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி வாழ்த்திப் பேசினாா். இதில் தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.
பின்னா், அவா் பேசியதாவது: தூய்மைப் பணியாளா்கள் தங்களது குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்களுக்கு தமிழக அரசு வங்கிகள் மூலமாக நலத் திட்ட உதவிகளை வழங்குகிறது. உங்களுக்கு வழங்கியுள்ள நலவாரிய அட்டைகள் மூலம் திருமண உதவி, விபத்துக் காப்பீடு, கல்விக் கடன், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெறலாம்.
வரும் டிச.6-ஆம் தேதி முதல் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. தூய்மைப் பணியாளா்களை அரசே தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிலையில், பழனியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நேரம் மாற்றப்பட வேண்டும், காலை உணவு வழங்கும் மையங்களிலேயே பணியாளா்கள் வருகைப் பதிவு எடுக்கப்பட வேண்டும், கூடுதல் பணிக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனா். இதற்கு உரிய ஏற்பாடு செய்து தருவதாக அவா் உறுதியளித்தாா்.
முன்னதாக, பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளை தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி வழங்கினாா். இதில் நகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.