முகப்பு
கரூர்

தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடி ஒதுக்கீடு - வாரியத் தலைவா் ஆறுச்சாமி தகவல்

கரூர்

தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடி ஒதுக்கீடு - வாரியத் தலைவா் ஆறுச்சாமி தகவல்

Updated On : 5 மார்ச், 2026 at 10:35 PM
பகிர்:

தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்துள்ளாா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி பங்கேற்று, 15 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைத்து நல வாரியங்களையும் விட தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடியை தமிழக முதல்வா் ஒதுக்கியிருக்கிறாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு விபத்தின் போது ஓா் உறுப்பு இழந்தால் இழப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தால் ரூ.5 லட்சமாக இருந்ததை, ரூ.10 லட்சமாகவும், குழந்தைகளின் திருமண உதவிக்கு ரூ.25 ஆயிரம் என இருந்ததை, ரூ.50 ஆயிரமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல தூய்மைப் பணியாளா்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ஆகவே, தூய்மைப் பணியாளா்கள் அரசு வழங்கும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், மாநகராட்சி மேயா் வெ.கவிதா, ஆணையா் கே.எம்.சுதா, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா் செ.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →