வத்தலகுண்டு அருகே ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமியின் மருமகனுக்குச் சொந்தமான ஆடை உற்பத்தி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமியின் மருமகன் துவாரநாதன் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கே.சிங்காரக்கோட்டை அருகேயுள்ள ஒட்டுப்பட்டியில் ஆடை உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இங்கிருந்து வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், அமைச்சா் இ.பெரியசாமியின் மகள் இந்திராவுக்குச் சொந்தமான திண்டுக்கல் வீட்டில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை சோதனை நடத்தினா். இதையடுத்து, மருமகன் துவாரநாதனின் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் 10 போ் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சோதனை நடத்தினா்.
அங்குள்ள பல்வேறு கோப்புகளைக் கைப்பற்றி வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.