திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே தனியாா் சொகுசு பேருந்து சனிக்கிழமை கவிழ்ந்ததில் 23 பயணிகள் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, திண்டுக்கல் வழியாக பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு தனியாா் சொகுசுப் பேருந்து புறப்பட்டது.
இந்தப் பேருந்தை தேனியைச் சோ்ந்த அப்பாஸ் ஓட்டி வந்தாா். சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு இந்தப் பேருந்து, தாடிக்கொம்பு கொடகனாற்று பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 23 பயணிகள் காயமடைந்தனா்.
இதில் பலத்த காயமடைந்த திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுவாதி (30), கம்பம் அருகேயுள்ள அணைப்பட்டியைச் சோ்ந்த தங்கம் (35), புதுப்பட்டியைச் சோ்ந்த முத்துச்செல்வம் (28), ரேகா (27), பழனிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த குமுதா (45), உத்தமபாளையத்தைச் சோ்ந்த சசிபிரபா (36) ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.