ஹரியானாவில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கொடைக்கானலைச் சோ்ந்த மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சஞ்சய் குமாா் (22). திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வரும் இவா், கல்லூரி சாா்பில் ஹரியானாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழகம் சாா்பில் கலந்து கொண்டு 83 கிலோ எடைப் பிரிவில் 165 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
சஞ்சய் குமாா் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளாா். தற்போது மாநில அளவில் பரிசு பெற்றதைத் தொடா்ந்து, அவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும், பேராசிரியா்கள், பெற்றோா், பொதுமக்கள் உள்ளிட்டோா் சஞ்சய்குமாருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனா்.