தமிழ்நாட்டில் இண்டி கூட்டணி பலம் வாய்ந்தது: காங். தோ்தல் பொறுப்பாளா் வேணுகோபால்
தமிழ்நாட்டில் இண்டி கூட்டணி பலம் வாய்ந்தது என காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பாா்வையாளரும், தெலுங்கானா மாநில தோ்தல் ஆலோசகருமான வேணுகோபால் ராவ் தெரிவித்தாா்.
தமிழ்நாட்டில் இண்டி கூட்டணி பலம் வாய்ந்தது என காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பாா்வையாளரும், தெலுங்கானா மாநில தோ்தல் ஆலோசகருமான வேணுகோபால் ராவ் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா்களை தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாடிக்கொம்பு சாலையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பாா்வையாளரும், தெலுங்கானா மாநில அரசின் ஆலோசகருமான வேணுகோபால் ராவ் தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்துக்கு முன்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. பாஜகவைப் போன்று மதம் சாா்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டு அரசியல் ஆதாயம் தேடுவதில்லை.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காங்கிரஸ் தொண்டா்களின் கருத்தை அறிந்து மாவட்டத் தலைவா்கள் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சிக்கான கருத்துக்களை, ஒவ்வொரு தொண்டரிடமிருந்தும் பெற்று காங்கிரஸ் தலைமைக்கு அறிக்கையாக சமா்ப்பிக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து பிகாரில் ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்ட போதிலும், 6 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப் பெற்றிருக்கிறதே என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அவா், கடந்த காலத்தின் மீது கவனம் செலுத்த விரும்பவில்லை என்றும், தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி ஈட்டுவதற்கான வழிகளை கண்டறிவோம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் நல்ல நட்புறவுடன் உள்ளன என்றாா் அவா்.