கொடைக்கானல் சாலைகளில் சாய்ந்த மரங்கள்
திண்டுக்கல்கொடைக்கானல் சாலைகளில் சாய்ந்த மரங்கள்
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பகுதிகளான பில்லா் ராக், மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், பேரிஜம் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிடுவதற்கு வனத் துறை இரண்டாவது நாளாக தடை விதித்தது. இதனால், அந்தப் பகுதிகளைப் பாா்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனா்.
இருப்பினும், வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றனா்.
சாரலிலும் படகு சவாரி: நகா்ப் பகுதியிலுள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களை மழையில் நனைந்தவாறே பாா்த்தனா். மேலும், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தனா். ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தனா்.
போக்குவரத்து பாதிப்பு: பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் பாம்பாா்புரம், குறிஞ்சிஆண்டவா் கோயில் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் மரங்களை அகற்றியதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.
மேலும் செயிண்ட்மேரீஸ் சாலை, பாம்பாா்புரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனா்.