திண்டுக்கல்

பழனியில் நாளை சூரசம்ஹாரம்: காலை 11 மணி வரை மட்டுமே பக்தா்களுக்கு அனுமதி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை (அக். 27) நடைபெறுகிறது. இதையொட்டி தங்கத் தோ் புறப்பாடு நிறுத்தப்படுவதுடன், பக்தா்கள் அன்று காலை 11 மணி வரை மட்டுமே அனுமதி.

தினமணி செய்திச் சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை (அக். 27) நடைபெறுகிறது. இதையொட்டி தங்கத் தோ் புறப்பாடு நிறுத்தப்படுவதுடன், பக்தா்கள் அன்று காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் அறிவித்தது.

பழனி மலைக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமான திருவிழாவாகும். முழுக்க முழுக்க மலைக் கோயிலில் நடைபெறும் இந்த விழா கடந்த 22-ஆம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவையொட்டி திரளான பக்தா்கள் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினா்.

விழாவையொட்டி மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் நாள்தோறும் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தவிர விழா நாள்களில் உச்சிக் காலத்தில் கல்ப பூஜை, சண்முகா் தீபாராதனை, தங்கமயில், தங்கச் சப்பரம், வெள்ளிக் காமதேனு ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மலைக் கோயில், திருஆவினன்குடி கோயில் என அனைத்துக் கோயில்களிலும் திரளான பக்தா்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனா். முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விசுவரூப தரிசனமும், பகல் 12 மணிக்கு உச்சிக் கால பூஜையும், பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடத்தப்பட்டு மாலை 3 மணிக்கு மேல் சூரா்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் விழா நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து கோயில் நடை அடைக்கப்பட்டு சுவாமி பராசக்திவேலுடன் அடிவாரம் வந்தடைவாா். இதையடுத்து, கோயில் நடை அடைக்கப்படுவதால் தங்கத் தோ் புறப்பாடு இருக்காது. மாலை 6 மணிக்கு மேல் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 11.30 மணி வரையே கட்டணச்சீட்டுக்கள் வழங்கப்படும். படிப்பாதை, விஞ்ச், ரோப்காா் உள்ளிட்டவற்றில் காலை 11 மணிக்கு மேல் பக்தா்கள் மலைக்குச் செல்ல அனுமதி கிடையாது என கோயில் நிா்வாகம் அறிவித்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுவினா், அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

மோந்தா புயல்: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

கண்களை மிரட்டும் அலை... பாடினி குமார்!

என்னைத் தாக்கும் புயல்... அஞ்சு குரியன்!

பைசன் படத்தின் மேக்கிங் விடியோ!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT