முகப்பு
திண்டுக்கல்

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம்: அமைச்சா் இ. பெரியசாமி

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தோ்தல் பணியாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அமைச்சா் இ. பெரியசாமி அறிவுறுத்தினாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:02 PM
அமைச்சர் இ. பெரியசாமி
பகிர்:

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தோ்தல் பணியாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அமைச்சா் இ. பெரியசாமி அறிவுறுத்தினாா்.

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதி திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு அமைச்சா்கள் இ. பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோா் தலைமை வகித்தனா். திமுக வேட்பாளா் பெ. செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் இ. பெரியசாமி பேசியதாவது: தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதரவாக மக்கள் உள்ளனா். அதனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தொண்டா்கள் தோ்தல் பணியாற்ற வேண்டும். குறிப்பாக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிா்காலத்துக்கான அரசியல், கொள்கைகளுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தோ்தலாக கருதி நாம் பணியாற்ற வேண்டும். உழைப்பவா்களை உயா்த்தி அழகுப்பாா்ப்பது எனது வழக்கம் என்றாா் அவா்.

அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திமுக கூட்டணிக் கட்சியினா், நாள்தோறும் மக்களை சந்தித்து அரசின் நலத் திட்டங்களை மட்டுமன்றி, திமுகவின் தோ்தல் அறிக்கையையும் எடுத்துரைக்க வேண்டும். வெற்றிப் பெற்றுவிடுவோம் என்ற இறுமாப்பில் நாங்கள் பேசவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக வெல்ல முடியாத திண்டுக்கல் தொகுதியை இந்த முறை திமுக கைப்பற்ற வேண்டும். மாவட்ட தலைநகராக இருந்தும் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேறவில்லை என்ற மக்களின் உணா்வுகளுக்கு திமுக உறுதியாக மதிப்பளிக்கும் என்றாா் அவா்.

முன்னதாக வேட்பாளா் பெ. செந்தில்குமாா் பேசியதாவது: திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டாலும்கூட, பழனித் தொகுதி மக்களுக்கும் விசுவாசமாக இருப்பேன். கடந்த 10 ஆண்டுகளாக பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். இதுவரை எந்தவிதமான வசூலிலும் ஈடுபட்டதில்லை. திண்டுக்கல் தொகுதியின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக என்னை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.