சூரியனும் இல்லை, இலையும் இல்லை; கூட்டணிக் கட்சிகள் மோதும் 21 தொகுதிகள்!
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் மோதாமல் கூட்டணிக் கட்சிகள் 21 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுவதைப் பற்றி...
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் மோதாமல் கூட்டணிக் கட்சிகள் 21 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன.
தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிய கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, முக்குலத்தே புலிப்படை, மஜக, கொங்கு இளைஞர் பேரவை உள்பட 23 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதேபோல, அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
புதுவரவான தமிழக வெற்றிக் கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டிப்போட தங்கள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. அதேநேரத்தில், முன்னணி தேசிய கட்சிகள் பாஜகவும், காங்கிரஸும் இன்னும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 167 இடங்களில் அதிமுகவும் 164 இடங்களில் திமுகவும் போட்டியிடுகின்றன. இதில், கொளத்தூர், எடப்பாடி உள்பட 121 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதுகின்றன.
மாநிலத் தலைநகரான சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுகவுக்கு எதிராக வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது அதிமுக. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையில் 16 தொகுதிகளில் 15-ல் வெற்றி பெற்றிருந்தது. சென்னையில், திமுகவை எதிர்கொள்ளும் முக்கிய வேட்பாளர்களாக பல முன்னாள் மாநில அமைச்சர்கள், மூத்த கட்சி உறுப்பினர்களை அதிமுக களமிறக்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் திமுகவின் உதயசூரியனும் அல்லாமல், அதிமுகவின் இரட்டை இலையும் அல்லாமல், 21 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் தங்களின் சொந்தச் சின்னங்களில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தத் தொகுதிகளில் இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னம் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
2021 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், அப்போது 11 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் நேருக்கு நேர் மோதியிருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பது புதிய கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பையும் புத்துணர்வையும் அளித்திருக்கின்றன.
சிறிய சிறிய கட்சிகள் 5,000 முதல் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் பல சிறிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், கூட்டணிக் கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்படும் இடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால், அவற்றில் வெற்றி பெற மூன்றாவது நான்காவது இருக்கும் கட்சிகள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் தளி தொகுதியில் அக்கட்சி மூன்று முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல, தேமுதிகவின் வலிமையான தொகுதியாகக் கருதப்படும் விருத்தாசலம் தொகுதியில் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது தேமுதிக.
விஜயகாந்த்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச் செயலருமான பிரேமலதா விஜயகாந்த் 15 ஆண்டுகள் கழித்து அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
காட்டுமன்னார் கோயிலில் 10 ஆண்டுகள் கழித்து விசிக தலைவர் திருமாவளவன் களமிறங்கியுள்ளார். கூட்டணிக் கட்சிகள் மோதும் 21 தொகுதிகளில் 9 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் வசமிருக்கின்றன.
கூட்டணிக்கட்சிகள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகள்
காங்கிரஸ் vs பாமக: சோளிங்கர், பென்னகரம், மயிலாடுதுறை
தேமுதிக vs பாமக: தருமபுரி, போளூர், சேலம் (மேற்கு), விருத்தாசலம்.
விசிக vs பாமக: காட்டுமன்னார்கோயில், திருப்போரூர்.