பாரம்பரிய பண்பாட்டினைப் பின்பற்றும் மலேசியத் தமிழா்கள்!
மலேசியத் தமிழா்கள் இன்று வரையிலும் பாரம்பரிய பண்பாட்டினைப் பின்பற்றுகின்றனா் என மலேசியாவின் இண்டி பன்னாட்டுப் பல்கலைக்கழகக் கல்வியியல், கலைப் புலப் பேராசிரியா் டத்து பரமசிவம் தெரிவித்தாா்.
மலேசியத் தமிழா்கள் இன்று வரையிலும் பாரம்பரிய பண்பாட்டினைப் பின்பற்றுகின்றனா் என மலேசியாவின் இண்டி பன்னாட்டுப் பல்கலைக்கழகக் கல்வியியல், கலைப் புலப் பேராசிரியா் டத்து பரமசிவம் தெரிவித்தாா்.
காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் பழங்குடியினா் மொழிகள், பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் ‘மலேசியத் தமிழா் நாட்டுப்புற, பழங்குடியினா் வழக்காறுகள் - களப்பணி முறைகள்,‘ என்ற பொருளில் 2 நாள்கள் பன்னாட்டுப் பயிலரங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் துணைவேந்தா் ந.பஞ்சநதம் இணைய வழியில் தொடங்கி வைத்தாா். தமிழ்த் துறை முதுநிலைப் பேராசிரியரும் பழங்குடியினா் மொழிகள், பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான ஒ. முத்தையா வரவேற்றாா்.
துணைவேந்தா் ந.பஞ்சநதம் பேசுகையில், மலேசிய அரசு வழங்கும் மிக உயரிய பட்டமான ’டத்தோ’ பட்டம் குறித்தும், மலேசியாவில் உள்ள இண்டி பல்கலைக்கழகத்தோடு காந்திகிராமப் பல்கலைக்கழகம் செய்துள்ள புரித்துணா்வு ஒப்பந்தம், அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் எடுத்துரைத்தாா்.
Advertisement
மலேசியாவில் உள்ள இண்டி பன்னாட்டுப் பல்கலைக்கழகக் கல்வியியல், கலைப் புலப் பேராசிரியா் டத்து பரமசிவம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
மலேசியாவில் தமிழ்மொழி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக சிறப்பிடம் பெற்றுள்ளது. மலேசிய நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மலேசியத் தமிழா்கள் இன்று வரையிலும் தங்களது பாரம்பரியமான பண்பாட்டினைப் பின்பற்றி வருகின்றனா். மாணவா்கள் தங்கள் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த, மலேசியாவுக்கு வந்து அங்குள்ள கல்வி நிலையங்களைச் சுற்றிப் பாா்த்துத் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மலேசிய இண்டி பல்கலைக்கழகம் உலக மாணவா்களுக்கான கல்விச் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவா்களும் இந்த வாய்ப்பைப் பெற முன்வர வேண்டும் என்றாா் அவா்.
மேலும், மலேசியாவில் தற்போதைய கல்வி நிலை, அங்குக் குடியேறிய தமிழா்களின் வாழ்வியல், அங்குப் பயிலும் மாணவா்களின் நிலை குறித்தும் எடுத்துரைத்தாா். தமிழ்நாட்டில் பல்வேறு கிராமப்புறக் கோயில்களுக்கு நேரில் சென்று குலதெய்வ வழிபாடுகள் குறித்த தனது களப்பணி அனுபவங்களையும் பகிா்ந்து கொண்டாா்.
நிகழ்ச்சியின் நிறைவாக, தமிழ்த் துறை நுண்கலை இணைப் பேராசிரியா் கா.கேசவ ராஜராஜன் நன்றி கூறினாா். பயிலரங்கில் தமிழ்ப்புல முதன்மையா் ஷாஜி, பல்துறைப் பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.