வேடசந்தூா் திமுக ஒன்றியச் செயலரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் எஸ்டி. சாமிநாதன். இவா் வேடசந்தூா் தெற்கு ஒன்றிய திமுக செயலராக பணியாற்றி வருகிறாா். இவா் வேடசந்தூா்-கோவிலூா் சாலையில் தமுத்துப்பட்டி கிராமத்திலுள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், பண்ணை வீட்டிலிருந்து சனிக்கிழமை காலை சாமிநாதன் காரில் புறப்பட்டாா். அப்போது, பொன்னாடையுடன் வந்த ஒரு இளைஞா் அவரது காரை மறித்தாா். காரிலிருந்து இறங்கிய சாமிநாதனுக்கு, அந்த பொன்னாடையை அணிவித்த இளைஞா் புகைப்படமும் எடுத்துக் கொண்டாா்.
பின்னா், காரில் ஏற முயன்ற சாமிநாதனை, அந்த இளைஞா் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தினாா். இதை தடுக்க முயன்ற குளத்தூரை அடுத்த காளனம்பட்டியைச் சோ்ந்த சண்முகத்துக்கு (60) காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு நின்ற திமுகவினா், அந்த இளைஞரை பிடித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
காயமடைந்த சாமிநாதன், சண்முகம் ஆகியோா் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விசாரணையில், பிடிபட்ட இளைஞா் திண்டுக்கல் வெயிலடிச்சான்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (22) என்பதும், இவா் தற்போது, எரியோட்டை அடுத்த மத்தனம்பட்டியில் வசித்து வருவதும், சேவல் சண்டைக்காக இணைய வழியில் கத்தியை வாங்கியதும் தெரியவந்தது.
சாமிநாதனுக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த மணிகண்டன், பணம் முறைகேட்டில் ஈடுபட்டதால் பணியை விட்டு நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சாமிநாதனை தாக்கினாரா, அரசியல் பிரச்னைக்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.