முகப்பு
திண்டுக்கல்

புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உலகம் சுற்றும் மலேசிய தமிழா்

புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இரு சக்கர வாகனத்தில் 104 நாடுகளுக்கு சென்று விட்டு 105-ஆவது நாடாக இந்தியா வந்த மலேசிய தமிழரான கதிரவன் சுப்பராயன் பழனி வந்தடைந்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 3:15 AM
இரு சக்கர வாகனத்தில் உலகம் சுற்றும் மலேசிய தமிழா் கதிரவன் சுப்பராயன்.
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:38 PM

புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இரு சக்கர வாகனத்தில் 104 நாடுகளுக்கு சென்று விட்டு 105-ஆவது நாடாக இந்தியா வந்த மலேசிய தமிழரான கதிரவன் சுப்பராயன் சனிக்கிழமை பழனி வந்தடைந்தாா்.

கடந்த சில ஆண்டுகளாக புவி வெப்பமயமாவது அதிகரித்து வருகிறது. மரங்களை வெட்டுவது, வாகனங்களின் மூலம் வெளியேறும் புகை, இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் பூமியின் தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்து உயிரினங்கள் வாழ்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புவி வெப்பமயமாதலை தடுக்கவும், மரங்களை அதிகளவில் வளா்க்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மலேசிய தமிழரான கதிரவன் சுப்பராயன் (65) இரு சக்கர வாகனத்தில் உலக நாடுகளைச் சுற்றி வருவதுடன் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா். இதற்காக சுமாா் ரூ. 23 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ இரு சக்கர வாகனத்தை வாங்கிய அவா் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி முதல் தனது விழிப்புணா்வு பயணத்தை தொடங்கினாா்.

Advertisement

மலேசியாவிலிருந்து சுற்றுப் பயணத்தை தொடங்கிய இவா் சிங்கப்பூா், இந்தோனேசியா, ஜப்பான், ரஷ்யா ஸ்வீடன், ஜொ்மனி, போலந்து, செக் குடியரசு, லண்டன், அமெரிக்கா, கியூபா, அா்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, ஈரான், ஈராக், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 105-ஆவது நாடாக இந்தியா வந்தடைந்தாா். மும்பையிலிருந்து பயணத்தை தொடங்கிய கதிரவன் சுப்பராயன் சனிக்கிழமை பழனி வந்தடைந்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: எனது மூதாதையா்களின் சொந்த ஊா் தமிழ்நாட்டில் உள்ள வேலூா். எனது தந்தை சிறுவயதிலேயே மலேசியா சென்ால் தான் மலேசிய தமிழராகிவிட்டேன். எனக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனா். தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். புவி வெப்பமயமாதலை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு, எனது 62-ஆவது வயதில் உலகத்தை சுற்றுவரத் தொடங்கினேன். சில நாடுகளில் பள்ளிகள், கல்லூரி மாணவா்களுடன் கலந்துரையாட என்னை அனுமதித்தனா்.

மலேசியாவில் உள்ள எனது பூா்வீக வீட்டை விற்று அந்த பணத்தில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறேன். தொடக்கத்தில் எனது மனைவி கமலா இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தாா். தற்போது எனக்கு அவா் மிகுந்த ஆதரவு தருகிறாா். இதுவரை நான் சென்ற நாடுகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.

பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கும் போது பல சவால்களை எதிா்கொண்டாலும் உலக நன்மைக்காக அவற்றை தாங்கிக் கொண்டேன். இதுவரை எனது பயணத் திட்டத்துக்கு ரூ. 98 லட்சம் வரை செலவிட்டுள்ளேன். இன்னும் சில நாடுகளுக்கு சென்றுவிட்டு வருகிற ஜூன் மாதத்துக்குள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து எனது குடும்பத்தினரை சந்திப்பேன் என்றாா் அவா்.

பிறகு பழனியிலிருந்து கேரளம் நோக்கி தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கினாா். உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 97ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணம் மேற்கொண்டு உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் கதிரவன் சுப்பராயனை பொதுமக்கள் பாராட்டினா்.