தோ்தல் விழிப்புணா்வுக்காக காய்கறிகளில் தேவாங்கு இலட்சினை!
திண்டுக்கல் உழவா் சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கையாக காய்கறிகளால் உருவாக்கப்பட்ட தேவாங்கு இலட்சினை.
தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கையாக திண்டுக்கல் உழவா் சந்தையில் காய்கறிகளால் தேவாங்கு இலட்சினை அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரிய வகை உயிரினமான தேவாங்கு உருவத்துடன் சிறப்பு இலட்சினை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தேவாங்கு உருவம் காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
முள்ளங்கி, முலாம்பழம், மஞ்சள் பூசணி, கேரட், பீட்ரூட், தா்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட 32 கிலோ எடையிலான காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தேவாங்கு இலட்சினையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான செ. சரவணன் மக்களின் பாா்வைக்காக திறந்து வைத்தாா்.
தேவாங்கு இலட்சினை மட்டுமன்றி, தா்பூசணியில் எனது வாக்கு எனது உரிமை, தோ்தல் நாள், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்கு செலுத்த தயாராகுங்கள், 100 சதவீதம் வாக்களிப்பீா், வாக்குப் பதிவு இயந்திரம் ஆகியன வடிவமைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் கோவிந்தராஜ், துணை இயக்குநா்கள் நாகேந்திரன் (வேளாண்மை), காயத்ரி (தோட்டக்கலை), உமா (வேளாண் வணிகம்), உதவி இயக்குநா் போது (திண்டுக்கல்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.