முகப்பு
பெரம்பலூர்

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, பெரம்பலூரில் ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மார்ச், 2026 at 9:47 PM
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற ரோலா் ஸ்கேட்டிங் விழிப்புணா்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.
பகிர்:

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, பெரம்பலூரில் ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தொடங்கிய ரோலா் ஸ்கேட்டிங் விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந் நிகழ்ச்சியில், ‘எனது இந்தியா - எனது வாக்கு’, ‘நான் பாரதம்’, ‘நமது வாக்கு- நமது உரிமை’, ‘வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை’ உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திச்சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் தொடங்கிய ஸ்கேட்டிங் பேரணியானது, வெங்கடேசபுரம் வழியாகச் சென்று விளாமுத்தூா் பிரிவுச்சாலை எதிரே நிறைவடைந்தது.

விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள்:

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேப்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மிருணாளினி தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் பொதுமக்கள் வாக்களிப்பது குறித்த தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து, விழிப்புணா்வு பிரசாரப் பாடலை இசைப் பள்ளி ஆசிரியா் மற்றும் மாணவா்கள் பாடினா். மேலும், சிலம்பாட்டம், தப்பாட்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா, ந. சக்திவேல், வட்டாட்சியா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.