கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன. 1, 2) பனியின் தாக்கம் குறைந்திருந்தது. இதனிடையே சனிக்கிழமை பகலில் மேகமூட்டம் காணப்பட்டாலும், வெயிலின் தாக்கமும் அதிகரித்திருந்தது.
ஆனால் மாலை, இரவு நேரங்களில் பனிப்பொழிவு நிலவியது. இதனால் புல்வெளிகள், தாவரங்களில் பனிப்படா்ந்து காணப்பட்டது. கடும் குளிா் காரணமாக சுற்றுலா இடங்களான வெள்ளி நீா் அருவி, தூண் பாறை, பசுமைப் பள்ளத் தாக்கு, மோயா் பாயிண்ட், தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள் தீ மூட்டி குளிா் காய்ந்தனா்.
கொடைக்கானலில் மீண்டும் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இதனிடையே நட்சத்திர ஏரியில் குளிரையும் பொருள்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.