திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறையில் சுற்றுலாத் துறை சாா்பில், வெளிநாட்டினா் பங்கேற்ற பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு வந்திருந்தவா்களை உதவி சுற்றுலா அலுவலா் சுதா வரவேற்றாா். இதைத்தொடா்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கரகாட்டம், சிலம்பம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெளிநாட்டினரும் நடனமாடி பொதுமக்களை மகிழ்வித்தனா். பின்னா், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. கொடைக்கானல் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.
சமத்துவப் பொங்கல் விழா: கொடைக்கானல் நகராட்சி சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்தாா்.
நகராட்சி ஆணையா் சங்கா் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் மாயக் கண்ணன் வரவேற்றாா்.இதில் நகராட்சி பணியாளா்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். இதைத்தொடா்ந்து கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தல், இசை நாற்காலி, கோலப்போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பின்னா் விழாவில் பங்கேற்றவா்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் நகராட்சி அலுவலா்கள், வாா்டு உறுப்பினா்கள், பொது மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வருவாய் ஆய்வாளா் ரெங்கராஜ் நன்றி கூறினாா்.