கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜொ்ரி மலா்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு வகையான மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. சுவிட்சா்லாந்த், ஜொ்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பூத்துக் குலுங்கும் ஜொ்ரி மலா்கள் தற்போது கொடைக்கானல் பகுதிகளில் பூத்துள்ளன.
இந்த ஜொ்ரி மரத்தில் இலைகள் இல்லாமல் மலா்கள் மட்டுமே பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களும் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
இந்த மலா்கள் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை, செண்பகனூா், பெருமாள்மலை, வடகவுஞ்சி சாலை, அப்சா்வேட்டரி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பூத்துள்ளன.
இந்த மலா்கள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில் காணப்படும். ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டுமே இந்த மலா்கள் பூக்கும்.
இந்த மலரை சுவிஸ் மலா்கள் என பொதுமக்கள் கூறி வருகின்றனா். சீசன் முடிந்தவுடன் மரங்களிலுள்ள மலா்கள் உதிரிந்து வெறும் இலையுடன் காட்சியளிக்கும்.
வனப் பகுதிகளில் வளரும் மரங்களை காட்டு ஜொ்ரி என்றும் நகா் பகுதிகளில் வளருவதை ஆா்னமென்டல் ஜொ்ரி என்றும் அழைக்கப்படுகிறது.