கொடைக்கானல் - பூம்பாறை மலைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு புலிகளின் நடமாட்டத்தை விடியோவாக எடுத்து சுற்றுலாப் பயணிகள் முகநூலில் பதிவிட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்தனா்.
இதையடுத்து, அவற்றை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களில் வன விலங்குகளான காட்டு மாடு, காட்டுப் பன்றி, மான் ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் மேல்மலைக் கிராமங்களில் கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை அந்தப் பகுதி மக்கள் பாா்த்து அச்சமடைந்தனா்.
மேலும் மேய்ச்சல் நிலங்களில் திரிந்த இரண்டு மாடுகளை புலி தாக்கியது. தற்போது கொடைக்கானல்-பூம்பாறை மலைச் சாலையில் இரண்டு புலிகளை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து அவற்றின் நடமாட்டத்தை விடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்டனா். இதனால் கொடைக்கானல் மேல்மலையைச் சோ்ந்த கிராம மக்கள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து பூம்பாறை கிராம மக்கள் கூறியதாவது: இந்தப் பகுதிகளில் காட்டு மாடு, பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் சேதமடைகின்றன. தற்போது புலிகள் நடமாட்டம் இருப்பதாக பரவும் தகவலால் பெரிதும் அச்சமடைந்தோம்.
எனவே பூம்பாறை மலைச் சாலையில் நடமாடும் இரண்டு புலிகளையும் வனத்துறையினா் உடனடியாக பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கொடைக்கானல் வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: பூம்பாறை மலைச் சாலையில் இரண்டு புலிகளின் நடமாட்டம் இருப்பதாக சமூக வலை தளங்களில் பரவிய தகவலையடுத்து 10-க்கும் மேற்பட்ட வனப் பணியாளா்கள் அங்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் அவற்றை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.