சின்னாளபட்டி அருகே வீட்டில் நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (50). இவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை திடீரென வெடிபொருள் வெடித்துச் சிதறியது.
இதில் கணேசன் பலத்த காயமடைந்தாா். மேலும், அவரது ஓட்டு வீடு சேதமடைந்தது. பின்னா், அக்கம் பக்கத்தினா் கணேசனை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தடயவியல் நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் வெடி விபத்து நிகழ்ந்த வீட்டில் சோதனையிட்டனா். அப்போது, வீட்டில் பேட்டரி, கரிமருந்து, திரி உள்ளிட்ட பொருள்களை அவா்கள் கைப்பற்றினா்.
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுவெடி தயாரித்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.