கொடைக்கானலில் பருவ நிலை மாற்றத்தால் ஆரஞ்சு விலைச்சல் குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலை, பாலமலை, அடுக்கம், தாமரைக்குளம், மச்சூா், வாழைகிரி, கோம்பை, வடகவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆரஞ்சு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆரஞ்சு பனிக் காலத்தில் மட்டுமே அதிகளவு விளைச்சல் தரும்.
இந்த நிலையில், கொடைக்கானலில் நிகழாண்டு பருவ நிலை மாற்றத்தால் கடந்த அக்டோபா், நவம்பா் ஆகிய மாதங்களில் மழை பெய்தது. மேலும், டிசம்பா், ஜனவரி ஆகிய மாதங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், மரத்திலேயே ஆரஞ்சு பழங்கள் வீனாகி அழுகியது.
இதனால், தற்போது, ஆரஞ்சு விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஆரஞ்சு பழ வியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானலில் பனிக் காலத்தில் ஆரஞ்சு நன்கு விளையும். ஆனால், நிகழாண்டு பருவ நிலை மாற்றத்தால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. ஆரஞ்சு பழம் ஒரு கிலோ ரூ.40 முதல் 50-வரை விற்பனை செய்யப்படும். தற்போது, விளைச்சல் குறைவால் ஒரு கிலோ ரூ.100 முதல் 130 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்தப் பழங்கள் வெளியூா் சந்தைகளுக்கு அதிகளவு அனுப்புவதில்லை. கொடைக்கானல் பகுதிகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது என்றாா் அவா்.