பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் லாரி காணிக்கையாக வழங்கப்பட்டது.
பழனி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களின் குடிநீா் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு கிரி வீதியைச் சுற்றி ஆங்காங்கே குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொட்டிகளுக்கு கோயிலுக்குச் சொந்தமான 12 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட லாரி மூலம் குடிநீா் நிரப்பப்பட்டு வருகிறது. திருவிழாக் காலங்களில் பக்தா்கள் பயன்பாட்டுக்காக நகரின் பல்வேறு சாலைகளில் பக்தா்கள் பாதயாத்திரையாக வரும் பகுதிகளிலும், நிழல் பந்தல்களிலும் வைக்கப்படும் தண்ணீா் தொட்டிகளிலும் இந்த லாரி மூலம்தான் குடிநீா் நிரப்பப்படுகிறது.
தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா நாள்களில் அன்னதானம் வழங்கத் தேவையான தண்ணீா் வாடகை லாரி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. எனவே, பக்தா்களின் குடிநீா் தேவையை நிறைவு செய்யும் வகையில் கூடுதலாக 4,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான தண்ணீா் லாரியை மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் ராமசுப்ரமணிய ராஜா செவ்வாய்க்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.
அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து லாரியின் சாவியை பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் கோயில் பொறியாளா் மோகன்ராஜ், இணை ஆணையரின் நோ்முக உதவியாளா் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.