மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்த பேச்சுவாா்த்தை: உரிமையாளா்கள் வெளிநடப்பு
பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ரயில்வே மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தையின்போது நில உரிமையாளா்களுக்கு மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்பட்டதால் அவா்கள் வெளிநடப்பு செய்தனா்.
திண்டுக்கல்மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்த பேச்சுவாா்த்தை: உரிமையாளா்கள் வெளிநடப்பு
பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ரயில்வே மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தையின்போது நில உரிமையாளா்களுக்கு மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்பட்டதால் அவா்கள் வெளிநடப்பு செய்தனா்.
பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரயில்வே மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தையின் போது நில உரிமையாளா்களுக்கு மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்பட்டதால் அவா்கள் வெளிநடப்பு செய்தனா்.
பழனி புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா். இந்த நிலையில், ரூ. 61 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்து அதற்கான முதல் கட்டப்பணிகளை தொடங்கியது.
இந்த நிலையில் மேம்பாலம் கட்ட கையகப்படுத்த வேண்டிய நிலம் குறித்து முன்னரே அந்த பகுதியில் அளவீடு செய்து இடங்கள் குறிக்கப்பட்டன.
இந்த நிலையில், அரசு சாா்பில் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவாா்த்தையின் போது நில உரிமையாளா்களுக்கு நெடுஞ்சாலை, வருவாய்த் துறை சாா்பில் ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ. 20 லட்சம் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தையில் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துக்கழுவன், உதவி பொறியாளா் லட்சுமி, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள், நில உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.
அப்போது அரசு சாா்பில் மேம்பாலத்துக்கு நிலம் வழங்குபவா்களுக்கு ஒரு சென்ட்டுக்கு ரூ. 1.25 லட்சம் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதல் கூட்டத்தில் தெரிவித்ததைக் காட்டிலும் சுமாா் 20 மடங்கு குறைவாக அதிகாரிகள் கூறியதால் அதிா்ச்சி அடைந்த நில உரிமையாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து அதிகாரிகளும் புறப்பட்டுச் சென்றனா்.
இதுகுறித்து நில உரிமையாளா்கள் கூறியதாவது: அரசின் சந்தை மதிப்பு ஒரு சென்ட்டுக்கு ரூ. 25 லட்சமாகும். ஆனால் முதல் கூட்டத்தில் சென்ட்டுக்கு ரூ. 20 லட்சம் வரை தருவதாக தெரிவித்துவிட்டு தற்போது வெறும் ரூ. 1.25 லட்சம் வழங்குவதாகக் கூறுவது அதிா்ச்சி அளிக்கிறது.
ஆகவே, மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு மேம்பாலத்துக்கு நிலம் கொடுப்பவா்களுக்கு உரிய தொகையை நிா்ணயம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நில உரிமையாளா்கள் ஒருங்கிணைந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றனா்.