மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: தலைமறைவான மற்றொருவா் திண்டுக்கல்லில் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமைறைவாக இருந்த மற்றொருவா் திண்டுக்கல்லில் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமைறைவாக இருந்த மற்றொருவா் திண்டுக்கல்லில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்தவா் 35 வயதான மாற்றுத்திறனாளி பெண். கேட்புத் திறன், பேச்சுத் திறன் இல்லாத இவா் திருமணமாகாதவா். தனியாா் ஆலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பாச்சிக்கோட்டை பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை காத்திருந்தாா்.
அப்போது, கறம்பக்குடியை அடுத்த மணகொல்லை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (55), சேகா் (56) ஆகியோா் காரில் பாச்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றனா். மாற்றுத்திறனாளி பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனிமையான இடத்துக்கு கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, ஒரு கிராமத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில், மலையூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில் தொடா்புடைய மாரிமுத்தை உடனடியாக போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த சேகரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், சேகா் பழனியிலிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய சேகரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து புதுகோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் வந்த புதுக்கோட்டை போலீஸாரிடம் சேகா் ஒப்படைக்கப்பட்டாா்.