கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மேலும் ஒருவா் கைது
கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வாய்பேச முடியாத, காது கேளாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண், ஆலங்குடி பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, மணக்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா்களான எஸ். மாரிமுத்து (55), ஏ. சேகா் (56) ஆகியோா் அப் பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னா், மணக்கொல்லை வயல்வெளி பகுதியில் காரில் இருந்து அப்பெண்ணை இறக்கிவிட்டு சென்றுவிட்டனராம். அந்த வழியாக சென்றவா்கள் அப்பெண் அழுதுகொண்டு நிற்பதை பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அங்கு சென்ற மழையூா் போலீஸாா், அப் பெண்ணை மீட்டு புதுக்கோட்டை ராணியாா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஆலங்குடி அனைத்து மகளிா் போலீஸாா், கூட்டு பாலியல் வன்கொடுமை, கடத்தல், தாக்கியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மாரிமுத்துவை திங்கள்கிழமை கைது செய்தனா்.
உறவினா்கள் மறியல்: இந்நிலையில், தலைமறைவாக இருந்த சேகரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மழையூா் காவல் நிலையம் அருகே புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா, அப் பெண்ணின் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் மழையூா் பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் பிருந்தா தலைமையிலான தனிப்படை போலீஸாா், தலைமறைவாக இருந்த சேகரை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.