கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் வெற்றிடமாக காணப்பட்ட அரங்குகள்
கொடைக்கானல் மலா்க் கண்காட்சி குறித்த விழிப்புணா்வு போதிய அளவில் இல்லாததால் 25-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் புதன்கிழமை வெற்றிடமாகக் காணப்பட்டன.
கொடைக்கானல் மலா்க் கண்காட்சி குறித்த விழிப்புணா்வு போதிய அளவில் இல்லாததால் 25-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் புதன்கிழமை வெற்றிடமாகக் காணப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் புதன்கிழமை 63-ஆவது மலா்க் கண்காட்சி தொடங்கியது. இங்கு 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அரசு, தனியாா் துறை நிறுவனங்கள் குறித்த விழிப்புணா்வு, உணவுப் பொருள்கள் விற்பனை ஆகியவை நடைபெறும். நிகழாண்டிலும் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. இவற்றில், 25-க்கும் மேற்பட்ட அரங்குகளைப் பயன்படுத்த வணிகா்கள் யாரும் முன்வராததால் வெற்றிடமாகக் காட்சியளித்தது. இதனால் தோட்டக்கலைத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மேலும் கூறியதாவது:
Advertisement
Advertisement
கொடைக்கானலில் நடைபெறும் கோடை விழா குறித்து 3 தினங்களுக்கு முன்பே மாவட்ட அதிகாரிகள் தகவல் தெரிவிப்பாா்கள். நிகழாண்டில் 19-ஆம் தேதி இரவு, கோடை விழா 20-ஆம் தேதி நடைபெறுகிறது எனத் தெரிவித்ததால் கோடை விழாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை; அரங்கத்தைப் பயன்படுத்துவதற்கு வணிகா்களும் முன்வரவில்லை. கொடைக்கானலில் உள்ள அரசு, தனியாா் துறை நிறுவனங்கள் மட்டுமே அரங்கத்தை (ஸ்டால்) பயன்படுத்தினா். இந்த கோடை விழாவுக்கான அழைப்பிதழ் முறையாக இல்லை. கொடைக்கானலில் உள்ள முக்கியப் பிரமுகா்களுக்கு இலவச அனுமதி நுழைவுச் சீட்டு வழங்கவில்லை. விழாவில், ஒலிப் பெருக்கி கூட பயன்படுத்தவில்லை. அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு அரசுத் துறை சாா்பில் வைக்கப்பட்ட பதாகைகளில் தமிழக முதல்வரின் புகைப்படம் கூட இடம் பெறவில்லை. மிகவும் எளிமையான முறையில் மலா்க் கண்காட்சி நடைபெற்றது என்றாா் அவா்.