"ஜூன் மாதத்துக்குள் மின்வெட்டுக்கு முடிவு
2014 வருகிற ஜூன் மாதத்துக்குள் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாண முதல்வர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் என அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
2014 வருகிற ஜூன் மாதத்துக்குள் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாண முதல்வர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் என அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
மதுரை திருநகரில் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாநில அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்புரையாற்றிய நாஞ்சில் சம்பத் மேலும் பேசியது:
மாநிலப் பிரச்னை குறித்துப் பேச 10 நிமிடம் ஒதுக்கி அவமானப்படுத்துகிறது மத்திய அரசு. தமிழகத்தில் ஆட்சியர்கள்,போலீஸ் அதிகாரிகளுக்கு 3 நாள்கள் ஒதுக்கி மாவட்ட பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து, கடைசி நாளில் 343 திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
மின்வெட்டு குறித்துப் பேச திமுகவுக்குத் தகுதி இல்லை. தமிழகத்தின் மின்வெட்டுக்குக் காரணமே திமுகதான்.
கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. ஆனால், அதற்குப் பின் வந்த திமுக அரசு, ஜெயலலிதா கொண்டுவந்த புதிய மின் ஒப்பந்தங்களைச் செயல்படுத்தாமல், வெறும் 209 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது.
தற்போது புதிய மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் வருகிற ஜூன் மாதத்துக்குள் தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்னையை முதல்வர் முடிவுக்குக் கொண்டுவர உள்ளார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு சரிவை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர். தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு தர மறுக்கின்றனர்.
மத்திய கேபினட் அமைச்சராக உள்ள மு.க. அழகிரி மதுரையின் புனரமைப்பிற்காக எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. தமிழக மக்களுக்காக மின்சாரம், மண்ணெண்ணெயை மத்திய அரசிடம் கோரவில்லை.
காவிரி பிரச்னையில் கேரளத்துக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க கருணாநிதி வரவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் குரல் கொடுக்கவில்லை.
இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதா முதல்வரானவுடன், அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த ஆட்சியில் ஒரே நாளில் 20,920 ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவைப் பெற்றனர்.
பிரதமர் நாற்காலியில் அமரும் தகுதி பெற்றவர் ஜெயலலிதா என்றார் அவர்.