மதுரை

மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை

தினமணி

மதுரை அருகே சுமார் ரூ.600 கோடியில் எய்ம்ஸýக்கு இணையான மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கருத்துருவை அனுப்பியுள்ளது. இந்தத் திட்டம் அமைய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனையின் கிளையை மதுரை அருகே அமைக்க 2009-இல் திட்டமிடப்பட்டது. இதற்காக, மதுரை அருகேயுள்ள தோப்பூர் ஆஸ்டின்பட்டி காசநோய் சிகிச்சை மருத்துவமனை அருகே 365 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மத்திய சுகாதாரத் துறையினர் முன்னிலையில் பூமி பூஜையும் நடந்தது. ஆனால், திடீரென இத் திட்டம் கைவிடப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்குப் பதிலாக ரூ.150 கோடியில் மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் அரசு மருத்துவமனை விரிவாக்கக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

மதுரை அரசு மருத்துவமனையானது தென் மாவட்ட மருத்துவமனைகளின் தலைமை மருத்துவமனையாக விளங்குகிறது. தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். உள்நோயாளிகளாக 3 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

தென் மாவட்ட மருத்துவ மையமாக மதுரை திகழ்வதை முன்னிட்டு புற்றுநோய் ஆராய்ச்சி மண்டல மையம், பிரசவ சிகிச்சை பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய சுகாதாரத் துறை கருத்துருவை அனுப்பியுள்ளது. சுமார் ரூ.600 கோடியில் தோப்பூர் ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனை அருகே 325 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்கப்படுவதற்கான கருத்துரு மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு வந்துள்ளது.

எய்ம்ஸில் தனி மருத்துவக் கல்லூரி, அதனுடன் இணைந்த மருத்துவமனை, ஆராய்ச்சி மையங்கள் இடம் பெறவுள்ளன. மையம் அமைப்பதற்காக மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் நோயாளிகள் விவரத்தை மத்திய சுகாதாரத் துறை கடிதம் மூலம் கோரியுள்ளது.

எய்ம்ஸ் அமையவுள்ள ஆஸ்டின்பட்டியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 115 ஏக்கரில் 15 ஏக்கரில் காசநோய் மருத்துவமனை அமைந்துள்ளது. மீதமுள்ள இடத்தையும், அரசு புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கடிதம் மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் பி.சாந்தகுமாரிடம் கேட்டபோது, "எய்ம்ஸ் போன்ற நவீன ஆராய்ச்சி மையத்துக்கான கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் போன்ற மருத்துவ மையம் அமைந்தால், ஏழை எளிய நோயாளிகள் பயனடைவர்' என்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை அருகே அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT