மதுரை

ரௌடி இறப்பு சம்பவம்: போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே போலீஸார் சுட்டதில் ரௌடி இறந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தன்(42). வழிப்பறி வழக்கில் போலீஸார் இவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை மதுரையில் சனிக்கிழமை வெளியிட்டனர்.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறியது: வழிப்பறி வழக்கில் கோவிந்தனை கைது செய்ய முயன்றபோது, அவர் தன்னையும் முதல்நிலைக் காவலர் சவுந்தரபாண்டியனையும் அரிவாளால் வெட்டியதாகவும், அதனால் அவரை காலில் சுட்டதாகவும் சார்பு ஆய்வாளர் தங்க முனியசாமி கூறியுள்ளார்.
ஆனால், அவரது விலாவில் குண்டு பாய்ந்துள்ளது. இது தற்காப்புக்காக நடந்த துப்பாக்கிச்சூடு அல்ல. கோவிந்தனின் குடும்பத்தார் முன்னிலையில் அவரது உடல் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்.
சாதிய மோதல்கள் அதிகம் நிகழும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியில் உள்ள காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகளின் பின்னணி குறித்து விசாரணை நடத்துவது அவசியமாக உள்ளது. கோவிந்தனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அவரது மகள்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தங்க முனியசாமி 2011-இல் பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்தின்போது முத்துக்குமார் என்பவரை சுட்டுக்கொன்றார். எனவே இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான தங்க முனியசாமி உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார்.
அமைப்பின் நிர்வாகிகள் வழக்குரைஞர்கள் ஏ.செய்யது அப்துல் காதர், என்.எம்.ஷாஜகான், சமூக ஆர்வலர்கள் மு.சிவகுருநாதன், கு.பழனிச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT