மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பெரியார் பேருந்து நிலையத்தை ரூ.120 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் நவீனமயமாக்கும் பணிகள் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளன.
முன்பு மதுரையிலிருந்து நகரின் பிற பகுதிகளுக்கும், வெளியூர், வெளிமாநிலங்களுக்கும் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்தே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் திருவள்ளுவர் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக (ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்) பேருந்து நிலையங்களில் வெளியூர் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.நாளடைவில் நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பழங்காநத்தம், ஆரப்பாளையம், அண்ணா பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 1999 ஆம் ஆண்டு மாட்டுத்தாவணி பகுதியில் தற்போதைய எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் அமைக்கப்படும் வரை மதுரையின் பிரதான பேருந்து நிலையமாக பெரியார் பேருந்து நிலையமே இருந்தது.
திருவள்ளுவர் பேருந்து நிலையம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையாக்கப்பட்டுள்ளது. வணிக வளாக பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பேருந்து நிலையத்தை வணிக வளாக பேருந்து நிலையத்துடன் இணைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைமேம்பாலம் கட்டப்பட்டு பின்னர் அது இடிக்கப்பட்டது. நகரின் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் பெரியார் பேருந்து நிலையப் பகுதி அவ்வப்போது மாற்றத்துக்கு உள்ளானது. இப்பேருந்து நிலைய நெரிசலைக் குறைக்கவே எல்லீஸ்நகர் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, எல்லீஸ்நகருக்கு சாலையும் அமைக்கப்பட்டது.
பெரியார் பேருந்து நிலையத்தில் பறக்கும் சாலை பாலம் அமைக்கவும் கோரிக்கைகள் எழுந்தன. இந்தநிலையில் தற்போது பொலிவுறு நகரத் திட்டத்தில் ரூ.120 கோடியில் வணிக வளாக பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையங்களை இணைத்து நவீனமயமான சர்வதேச தரத்திலான பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இரு பேருந்து நிலையங்களுக்கும் இடையே உள்ள சாலையில் பறக்கும் சாலையும் அமைக்கப்படவுள்ளன. சுமார் 15 ஏக்கருக்கும் மேலாக அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்தில் பூமிக்கடியில் வாகன நிறுத்துமிடம், தரைத்தளத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம், வணிக வளாக பேருந்து நிலையத்தில் பெரிய வணிக வளாகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
வரும் மார்ச் முதல் 2019 ஆம் ஆண்டு வரை பெரியார் பேருந்து நிலைய நவீனமயமாக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் தற்போது பெரியார் மற்றும் வணிக வளாக பேருந்து நிலையங்களில் இயக்கப்படும் பேருந்துகளை எல்லீஸ்நகர் பகுதி, தமுக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றவும் மாநகராட்சி தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் கூறியது: பெரியார் பேருந்து நிலையம் நவீன முறையில் மேம்படுத்தப்படும். அதற்கான பணிகள் வரும் மார்ச்சில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.