கந்து வட்டிக் கொடுமை: காவல் ஆணையரிடம் நேரில் புகார் அளிக்கலாம்
மதுரையில் கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மாநகரக் காவல் ஆணையரிடம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நேரில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மாநகரக் காவல் ஆணையரிடம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நேரில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கந்து வட்டித் தடைச் சட்டம் 2003- பிரிவின் கீழ், தமிழக அரசு கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, சொத்துறுதி மற்றும் பிணைக் கடன்களுக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியும், பிணை அல்லாத கடன்களுக்கு ஆண்டுக்கு 12 சதவிகித வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, கடன் அளித்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, மதுரை நகரில் கந்து வட்டிக்காரர்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நேரில் சந்தித்து புகார் அளிக்கலாம். புகார் அளிக்க வருபவர்கள் கடன் தொடர்பான ஆவணங்களின் நகலையும் எடுத்து வரவேண்டும்.
புகார் அளித்த 10 நாள்களுக்குள் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.