முகப்பு
மதுரை

பிரம்மா குமாரிகள் ஆன்மிகத் திருவிழா: மதுரையில் மினி மாரத்தான்

மதுரையில் வியாழக்கிழமை தொடங்கும் பிரம்மா குமாரிகள் அமைப்பின் ஆன்மிகத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மினிமாரத்தான் போட்டி  நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

மதுரையில் வியாழக்கிழமை தொடங்கும் பிரம்மா குமாரிகள் அமைப்பின் ஆன்மிகத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மினிமாரத்தான் போட்டி  நடைபெற்றது.
   மதுரை தமுக்கத்தில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பில் ஆன்மிகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது. இதையடுத்து மதுரை ஆயுதப்படை மைதானம் மாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து மினிமாரத்தான் புதன்கிழமை காலை தொடங்கின.
இதில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டு அமைப்பைச் சேர்ந்த மாணவியர் 300 பேர் உள்பட 784 பேர் பங்கேற்றனர்.  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  மதுரை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் ஆகியோர் மாரத்தானை கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவியர் திருப்பாலை சர்ச் வரை சென்று மீண்டும் ஆயுதப்படை மைதானம் மாரியம்மன் கோயில் பகுதிக்கு திரும்பினர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடினர்.  அதில் டோக் பெருமாட்டி கல்லூரியைச் சேர்ந்த மாணவி எஸ். நீலாம்பரி முதலிடத்தையும்,  கேபிஎல் பள்ளி மாணவி எஸ்.கன்னிகாபரமேஸ்வரி இரண்டாமிடத்தையும்,  ஓசிபிஎம் பள்ளி மாணவி எம்.நந்தினி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
மாணவர்கள் ஊமச்சிகுளம் வரை சென்று மீண்டும் ஆயுதப்படை மைதானம் மாரியம்மன் கோயில் பகுதிக்கு திரும்பினர். இதில் விளையாட்டு அமைப்பைச் சேர்ந்த எஸ்.வினோத்குமார் முதலிடத்தையும், சிவகாசி அஞ்சா கல்லூரி மாணவர்கள் எஸ்.குணாளன், கஜேந்திரகோகுல் ஆகியோர் இரண்டாம், மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
போட்டியில் வென்று முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு ரூ.1000 என பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மாரத்தானில் இரு பிரிவிலும்  பங்கேற்ற 25 மாணவ, மாணவியருக்கு ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் உமா, அமைப்பின் தலைமை கல்விப் பிரிவு பி.கே. பாண்டியமணி, ஜெயகுமார் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் பி.கே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  தமுக்கத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கும் பிரம்மா குமாரிகள் ஆன்மிகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →