முகப்பு
மதுரை

கொலை வழக்கில் தவறாக கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு: காவல் ஆய்வாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு

கொலை வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கொலை வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மதுரை விரகனூர் பகுதியில் சிமென்ட் காங்கிரீட் கலவை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக சந்திரசேகரன் என்பவரும், கிளீனராக சந்தானகிருஷ்ணன் என்பவரும் பணியாற்றி வந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டில் சந்தானகிருஷ்ணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். 
இக்கொலை சம்பவம் குறித்து, திருநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. முடிவில், சந்திரசேகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால், அவரை விடுதலை செய்து நீதிபதி சஞ்சய்பாபா தீர்ப்பளித்தார். 
அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது: இந்தக் கொலை வழக்கில் உண்மை குற்றவாளி தப்பிக்க போலீஸார் உதவி புரிந்துள்ளனர். சம்பந்தமில்லாத சந்திரசேகரன் சிக்கவைக்கப்பட்டுள்ளார். 
எனவே, அவருக்கு ரூ. 1 லட்சத்தை இழப்பீடாக அரசு வழங்கவேண்டும். இந்தத் தொகையை வழக்கு விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் தங்கவேலு, குருவெங்கட்ராஜ், குலாம் ஆகியோரின் ஊதியத்தில் டி.ஜி.பி. பிடித்தம் செய்து தரவேண்டும். அது மட்டுமல்லாமல், காவல் ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →