தமிழகத்தில் போதிய மைதான வசதியில்லாமல் கிராம விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் ஆண்டுதோறும் சுமார் ரூ. 20 கோடி வீணடிக்கப்பட்டு வருவதாக, கல்வி ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கிராம விûளாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் குழு விளையாட்டுப் போட்டிகளாக வாலிபால், கால்பந்து, கபடி ஆகியனவும், தடகளத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியனவும், குண்டு, வட்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படவேண்டும்.
இப்போட்டிகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். குழு விளையாட்டுகளில் முதல் 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். தடகளப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும். போட்டியில் இடம்பெறும் அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுப் போட்டிகளை ஊராட்சி செயல் அலுவலர்கள் நடத்தவேண்டும். தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,520-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20.50 கோடி ஆண்டுதோறும் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான கிராம விளையாட்டுகள் தற்போதுதான் நடத்தப்பட நிதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகளில் ரூ.84 லட்சம் செலவில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்ட ஊராட்சிகளில் கிராமத் திடல், அங்குள்ள பள்ளிகளின் மைதானம் ஆகியவற்றில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கபடி விளையாட்டை நடத்துவதற்கு மட்டுமே இடம் உள்ளது. மேலும், 120-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கால்பந்து போட்டி நடத்துவதற்கான மைதான வசதியே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 15-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளன. மேலும், பல பள்ளிகளில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களே உள்ளனர். இந்தநிலையில், ஜூலைக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தி முடிப்பது என்பது இயலாதது என்பதே உடற்கல்வி ஆசிரியர்களின் கருத்தாகும்.
கடந்த 2016-17 ஆம் கல்வியாண்டுக்கான போட்டிகள் அவசர அவசரமாக தற்போது நடத்தப்படும் நிலையில், அதைத் தொடர்ந்து 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வி ஆண்டுகளுக்கான கிராம விளையாட்டுப் போட்டிகளும் அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. போட்டிகளை நடத்த உரிய வசதிகள், உள்கட்டமைப்புகள், கால அவகாசம் ஏதுமின்றி, வெறும் கண்துடைப்பாகவும், கடமைக்காகவும் நடத்துவதாகவே இருக்கும் என கல்வியாளர்கள் வருத்தப்படுகின்றனர். தற்போது, மாவட்டத்தில் 30 இடங்களில் மட்டுமே பெயரளவுக்கு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் கி.த. ராஜகுமார் கூறியது: கிராம விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூன் இறுதி வாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பல ஊராட்சிகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. போட்டிகள் நடத்தியோரிடமிருந்து அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன என்றார்.
ரூ. 20 ஆயிரத்தில் போட்டிகளை
நடத்துவது சாத்தியமா?
கிராம விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒவ்வொரு ஊராட்சி நிதியிலிருந்தும் ரூ. 8 ஆயிரம் பிடித்துக்கொள்வார்கள். வாலிபால், கால்பந்து, வாலிபால் வலை, இரும்புக் குண்டுகள், முதலுதவிப் பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களுக்காக ரூ. 6 ஆயிரத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பிடித்தம் செய்துகொள்கிறார்கள்.
ஒரு ஊராட்சியின் மொத்த நிதி ரூ.20 ஆயிரத்தில் ரூ.14 ஆயிரம் போக மீதமுள்ள ரூ.6 ஆயிரத்தில் ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுடன், போட்டி நடுவர்களுக்கான ஊதியம், அவர்களுக்கான உணவு உள்ளிட்டவையும் வழங்கப்படவேண்டும். இது எந்த வகையில் சாத்தியம்? என்று விளையாட்டு ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.