சித்திரைப் பொருள்காட்சி: ரூ.38 லட்சம் வசூல்
மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைப் பொருள்காட்சியில் கடந்த 40 நாள்களில் நுழைவுக் கட்டணமாக ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 710 வசூல் ஆகியுள்ளது.
மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைப் பொருள்காட்சியில் கடந்த 40 நாள்களில் நுழைவுக் கட்டணமாக ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 710 வசூல் ஆகியுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பொருள்காட்சி தொடங்கியது. அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அரங்குகள், வீட்டு உபயோகப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள் போன்ற விற்பனை அரங்குகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், தினமும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இந்த பொருள்காட்சியில், பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10, பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் 25 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை 40 நாள்களில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 134 பேர் பார்வையிட்டுள்ளனர். இதில், நுழைவுக் கட்டணமாக ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 710 வசூலாகியுள்ளது. ஜூன் 8 ஆம் தேதியுடன் பொருள்காட்சி நிறைவு பெறுகிறது.