முகப்பு
மதுரை

கச்சநத்தம் வன்முறை சம்பவத்தில் அரசியல் கட்சியினர் ஆதாயம் தேட முயற்சி: கிராம இளைஞர்கள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கொண்டு, அரசியல் கட்சியினர் ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஆவரங்காடு

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கொண்டு, அரசியல் கட்சியினர் ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஆவரங்காடு கிராம இளைஞர்கள் திங்கள்கிழமை குற்றம்சாட்டினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவில், அக்கிராமத்தினருக்கும், ஆவரங்காடு கிராமத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், மூவர் கொலை செய்யப்பட்டனர். பலத்த காயமடைந்த 5 பேர் மதுரையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மதுரையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: கச்சநத்தம் படுகொலை விவகாரம் இரு தனி நபர்களுக்கிடையிலான மோதலால் நடைபெற்றது. இந்த தாக்குதலில் சாதிய பிரச்னை இல்லை. ஆனால், இதில் தேவையின்றி ஒட்டு மொத்த ஆவரங்காடு கிராமமே குற்ற பின்னணியுடையதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆவரங்காட்டைச் சேர்ந்த பல இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
மூவர் கொலை சம்பவத்தில், தொடர்புடைய நபர்கள் என கச்சநத்தம் கிராம மக்கள் அளித்த புகாரில் 13 பேரைத்தான் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் காவல்துறை தற்போது ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 25 பேருடன், மேலும் பலர் என குறிப்பிட்டு பலரையும் தேடி வருகின்றனர். சாதிய வன்முறையில் ஒட்டுமொத்த ஆவரங்காடு மக்களையும் குற்றவாளிகளாக பிரசாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இப்பிரச்னையை வைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். இருதரப்பிலும் பேசி உண்மையை தெரிந்துகொண்டு கருத்துகளை தெரிவித்திருக்க வேண்டும். கச்சநத்தம் படுகொலைச் சம்பவத்தை எந்தவிதத்திலும் யாராலும் நியாயப்படுத்த முடியாது.
அதே நேரம் இதில் தொடர்பில்லாத இளைஞர்கள் காவல்துறையால் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்பட வேண்டும். திருப்பாச்சேத்தி பகுதியை தீண்டாமை வன்கொடுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் அரசியல் உள்நோக்கமே உள்ளது என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →