உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் கோரிய மனு தள்ளுபடி
உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவரது மனு:
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு மாநில அளவிலான தகுதித் தேர்வில் (எஸ்இடி) தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தமிழகத்தில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களைச் சமர்பிக்க பிப்ரவரி 9 ஆம் தேதி கடைசி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேர்வு விண்ணப்பங்கள் அடங்கிய இணையதளத்தின் சர்வர் வேகம் மிக்குறைவாக இருந்தது. இதனால் தேர்வு எழுத விரும்பிய பலரால் உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே மாநில தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நீதிமன்றத்தை தாமதமாக நாடியுள்ளார் எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.