தாலிக்குத் தங்கம்: மதுரை மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு ரூ.152 கோடி உதவி
திருமண உதவித் திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் 30 ஆயிரத்து 632 பேருக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையாக ரூ.152.18 கோடி வழங்கப்பட்டுள்ளது.
திருமண உதவித் திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் 30 ஆயிரத்து 632 பேருக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையாக ரூ.152.18 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:
ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவிடும் வகையில் சமூக நலத்துறை சார்பில் 5 வகையான திருமண உதவித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதிஉதவி, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான நிதியுதவி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களில் பட்டதாரி அல்லாதவர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரம், பட்டதாரி மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் கடந்த 2011 மே 17 முதல் வழங்கப்பட்டது. 2016 மே 23 முதல் இத் திட்டங்களின் திருமாங்கல்யத்துக்கு வழங்கப்படும் தங்கம் 8 கிராம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் 2014-15 முதல் நிகழ்ஆண்டில் தற்போது வரை 30 ஆயிரத்து 632 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ.114 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரமும், திருமாங்கல்யம் செய்வதற்காக ரூ.37 கோடியே 18 லட்சத்து 81 ஆயிரத்து 700 மதிப்பிலான தங்கம் வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.