மதுரை

பறக்கும் பாலத்துடன் ரூ. 618 கோடியில் நவீனமாகிறது மதுரை - நத்தம் சாலைதூரம் 7.3 கி.மீ. ; தூண்கள் 200 

மதுரை - நத்தம் சாலையில் பி.டி.ஆர்.சிலை சந்திப்பு முதல் கொடிக்குளம் வரை 7.3 கி.மீ.,க்கு ரூ.618 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கும் திட்டத்தை

சிவ. மணிகண்டன்

மதுரை - நத்தம் சாலையில் பி.டி.ஆர்.சிலை சந்திப்பு முதல் கொடிக்குளம் வரை 7.3 கி.மீ.,க்கு ரூ.618 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விரைவில் தொடங்க உள்ளது.
மதுரை - நத்தம் சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செயல்படுத்த உள்ளது.
மதுரையில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் ஒன்றாக புதுநத்தம் சாலை உள்ளது. மதுரை நகரப் பகுதியும் ஊரகப் பகுதியான ஊமச்சிகுளமும் தொடர்ச்சியாக இணைந்த பகுதிகளாக மாறிவிட்டது. குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இச் சாலையின் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.  மதுரை - நத்தம் 34 கி.மீ., சாலையானது தேசிய நெடுஞ்சாலைத் துறையால் நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது. 
  7.3 கிமீ-க்கு பறக்கும் பாலம்...:  பி.டி.ஆர். சிலை சந்திப்பு அருகே இருந்து நான்கு வழிச் சாலை தொடங்குகிறது. இதில் பாண்டியன் ஹோட்டல் அருகே இருந்து செட்டிகுளம் வரை 7.3 கி.மீ.,க்கு பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது.  இந்த பறக்கும் பாலம் நான்குவழிச் சாலையாகவும்,  கீழ் பகுதியிலும் நான்குவழிச் சாலை அமைகிறது. பறக்கும் பாலம் இறங்கும் செட்டிக்குளம் முதல் நத்தம் வரை நான்குவழிச் சாலை அமைக்கப்படுகிறது.
நாட்டின் முன்மாதிரித் திட்டம்...: இந்த பாலம் நாட்டுக்கே முன்மாதிரித் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாலம் அமைக்கப்படும் 7.3 கி.மீ.,க்கு ஒவ்வொன்றும்  நான்கு ஆரங்கள் இணைந்த  200 தூண்கள் அமைக்கப்படுகின்றன.  தூண்களில் மீனாட்சியம்மன், கள்ளழகர் உள்ளிட்ட சுவாமி சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேலும் பக்கவாட்டுப் பகுதியில் மதுரையின் கலாசார பெருமைகளை விளக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகியவற்றின் ஓவியங்கள் வரையப்படுகின்றன. நாகனகுளம், திருப்பாலை மின்வாரிய அலுவலகம் ஆகிய இரு இடங்களில் பறக்கும் பாலத்தில் மேல் இருந்து கீழே இறங்கி ஏறுவதற்கு சாலையில் இடது மற்றும் வலது பக்கத்தில் படிகள் அமைக்கப்படுகின்றன.
நான்கு குளங்கள் அழகுபடுத்தப்படுகிறது...: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வரலாற்றில் முதன் முறையாக சாலை அல்லாத பணியாக, குளங்கள் அழகுப்படுத்தும் பணியை இத் திட்டத்தோடு சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது. நாகனாகுளம், கிருஷ்ணன் கோயில் குளம், ஊமச்சிகுளம் கண்மாய், கருப்பன் குளம் ஆகியவற்றின் கரைகளைப் பலப்படுத்தி நடைபாதை அமைப்பது, மரங்கள் நடுவது, இருக்கை வசதி, சிறுவர் பூங்கா, உயர்கோபுர மின்விளக்கு போன்ற வசதிகளுடன் அழகுபடுத்தப்படுகிறது. 
அதிகாரிகள் ஆய்வு...: நான்கு வழிச் சாலை அமைய உள்ள பகுதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குநர் (மதுரை) வி.சரவணன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
 நான்கு வழிச் சாலைக்காக சில இடங்களில் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. இதில் சில வீடுகள், வணிக நிறுவனங்கள், காலிமனைகள் ஆர்ஜிதம் செய்ய வேண்டியிருப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மார்ச் இறுதிக்குள் நிதி ஒதுக்கீடு:பறக்கும் பாலம் மட்டும் ரூ.618 கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி இன்னும் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படும். இம்மாத இறுதியிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இந்த ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குநர் (மதுரை) வி.சரவணன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT