கப்பலூர் சுங்கச்சாவடி சாலையை சீரமைக்கக் கோரி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
கப்பலூர் சுங்கச்சாவடிக்கு உள்பட்ட சாலையை சீரமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தற்போதைய நிலை குறித்து அறிக்கை
கப்பலூர் சுங்கச்சாவடிக்கு உள்பட்ட சாலையை சீரமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க விதிக்கப்பட்ட உத்தரவு தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேசிய நெடுஞ்சாலை-7 வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு கப்பலூர் சங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை-கன்னியாகுமரி இடையே மதுரை மாவட்ட எல்லையில் இருந்து கப்பலூர் சுங்கச்சாவடி கட்டுப்பாட்டில் வரும் 50 கி.மீ. நீளம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளும் அதிகளவில் நடக்கின்றன. எனவே, இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என விருதுநகரைச் சேர்ந்த மணிமாறன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மனு செய்துள்ளார்.
ஒப்பந்தப்புள்ளி கோருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சாலையை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் சீரமைக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டது.
ஆனால், சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாலை சீரமைக்கப்படும் வரை கப்பலூர் சுங்கச்சாவடியை தாற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என மணிமாறன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சாலையை சீரமைக்கும் வரை கப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், கப்பலூர் சுங்கச்சாவடியில் நீதிமன்றம் உத்தரவிட்டதுபோல் 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படவில்லை. வெளியூரில் இருந்து வரும் வாகனங்களிடம் முழுத் தொகையும் வசூலிக்கப்படுகிறது என்றார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், சாலை சீரமைக்கப்படும் வரை கப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டணம் தான் வசூலிக்க வேண்டும். மேலும், அதன் தற்போதைய நிலை குறித்து வழக்குரைஞர் ஆணையர் அறிக்கை தாக்கல்
செய்ய உத்தரவிட்டு,2 வழக்கு விசாரணையை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.