முகப்பு
மதுரை

மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணையை ரத்து செய்யக்கோரும் மனு தள்ளுபடி

மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணையை ரத்து செய்யக்கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 29 மார்ச், 2018 at 8:19 AM
பகிர்:

மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணையை ரத்து செய்யக்கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சி.ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 நான் சேக்கிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். மார்ச் 12-ஆம் தேதி தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் 15 அரசுத் துறைகளின் கீழுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்து மாவட்ட  அளவில் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அது தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரமும் செய்யப்பட்டது.
 இதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சங்கங்களுக்கு மார்ச் 26 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 -ஆம் தேதி வரை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் 52(6) இன் படி தேர்தல் நடக்கும் நாளுக்கு 30 நாள்களுக்கு முன்பே தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் அட்டவணையாக தயாரித்து, தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்புமனு தேதி, வாக்காளர்கள் எண்ணிக்கை, தேர்தல் நாள், இடம் என அனைத்தையும் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிகளுக்கு மாறாக தேர்தல் அறிவிப்பு செய்த 20 நாள்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக மதுரை மாவட்ட சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.ராஜமாணிக்கம்  ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான அட்டவணை மற்றும் அறிவிப்பாணையை தேர்தல் நடைபெறும் தினத்தில் இருந்து 15 நாள்களுக்கு முன்னர் வெளியிட்டாலே போதுமானது என கூட்டுறவு சங்க விதிகளில் இருப்பதாக தெரிவித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.