முகப்பு
மதுரை

நோன்பு கஞ்சிக்கு மானிய விலை அரிசியை உடனடியாக வழங்க வேண்டும்: ஜமாத் நிர்வாகிகள் கோரிக்கை

ரம்ஜான் நோன்புக்கான மானிய விலை அரிசியை உடனடியாக வழங்க வேண்டும் என மதுரை ஜமாத் நிர்வாகிகள், திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

Updated On : 15 மே, 2018 at 3:46 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ரம்ஜான் நோன்புக்கான மானிய விலை அரிசியை உடனடியாக வழங்க வேண்டும் என மதுரை ஜமாத் நிர்வாகிகள், திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
தமிழக அரசு சார்பில் ரம்ஜான் நோன்புக்கு மானிய விலை அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் 123 பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சிக்கு அரிசி பெற மனு அளித்துள்ளனர். ஆனால், உரிய நேரத்தில் அரிசியை வழங்காமல் மாவட்ட அதிகாரிகள் அலைக்கழிப்பதாக ஜமாத் நிர்வாகிகள் புகார் கூறுகின்றனர்.
நோன்புக் கஞ்சி அரிசியை வழங்கக் கோரி மதுரை ஐக்கிய ஜமாத் செயலர் ஜே.ராஜ்கபூர், முன்னாள் தலைவர் அப்துல்காதர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நோன்புக் கஞ்சிக்கான அரிசியை மானிய விலையில் தருவதாக அரசு அறிவித்தது. ஆனால், அரிசிக்காக தொடர்ந்து அலையும் நிலையே உள்ளது. உரிய நேரத்தில் அரிசியைக் கொடுத்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவோம் என்றனர்.
அரிசி வழங்க நடவடிக்கை: ஜமாத் நிர்வாகிகள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த நிலையில், மாவட்ட பொது விநியோகத்திட்ட அதிகாரி ஜே.பாலசுப்பிரமணியன் அங்கு வந்து ஜமாத் நிர்வாகிகளிடம் பேசினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நோன்புக் கஞ்சிக்கான அரிசியை விதிமுறைப்படி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றே வழங்க முடியும். அதனடிப்படையில் ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் எவ்வளவு அரிசி தேவை என்பதை கணக்கெடுத்து, கோப்புகளைத் தயாரித்து ஆட்சியரிடம் கையெழுத்துப் பெற்றுள்ளோம். உடனடியாக நோன்பு கஞ்சிக்கான மானிய விலை அரிசியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மாணவி மனு: ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் எழுமலையைச் சேர்ந்த மணிமாலா, தனது மகள் வித்யாஸ்ரீ பொறியியல் கல்வி பயில, கல்விக்கடன் கோரி மனு செய்தும் எழுமலையில் உள்ள பொதுத்துறை வங்கியில் கடன் தர மறுப்பதாக மனு அளித்தார்.
சீர்மரபினர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.