மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் திங்கள்கிழ
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் திங்கள்கிழமை வழங்கினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 354 பேர் மனு அளித்தனர். இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் திருமண உதவித்தொகை, இலவச தையல் எந்திரம் மற்றும் சலவைப் பெட்டி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது இரு வாரங்களில் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்க, அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு சலவைப் பெட்டி, மதுரை மேற்கு, வடக்கு வட்டத்தில் 7 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.
மேலும் சமூகநலத்துறை சார்பில் 15 பேருக்கு இலவச தையல் எந்திரம், பணியின்போது மரணமடைந்த அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவு, மண்பாண்ட தொழிலாளர்கள் 5 பேருக்கு விலையில்லா மண்பாண்ட மின் விசை சக்கர சாதனங்கள் வழங்கப்பட்டன.
முகாமில் மொத்தம் ரூ.2.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், மகளிர் சுய உதவிக்குழு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் நிர்மலாராஜம், சமூக நல அலுவலர் தி.சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.