முகப்பு
மதுரை

மேலூர் அருகே குடிநீர் குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடிநீர் குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதாக கிராம மக்கள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர். மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி

Updated On : 13 நவம்பர், 2018 at 5:01 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM

மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடிநீர் குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதாக கிராம மக்கள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.
மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி ஊராட்சி, தர்மசானப்பட்டி கிராமத்தினர் பாட்டிலில் மாசடைந்த குடிநீருடன், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: தர்மசானப்பட்டி காலனி பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள குடிநீர் குளமானது மீன் வளர்ப்புக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மேலும் குளத்தில் கழிவுகளைக் கொட்டி வருவதால் குளம் மாசடைந்து வருகிறது.
இந்த தண்ணீரைக் குடிப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் சுகவீனம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஏற்கெனவே புகார் அளித்தபோது, ஆழ்குழாய் கிணறு விரைவில் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. எனவே, சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 312 மனுக்கள் பெறப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 10 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மூவருக்கு உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவுகளை ஆட்சியர் ச.நடராஜன் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், துணை ஆட்சியர் (பயிற்சி) கோட்டைகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.