முகப்பு
மதுரை

"மதுரை மாவட்டத்தில் 46 வெள்ள நிவாரண மையங்கள் தயார்' 

மதுரை மாவட்டத்தில்   46 வெள்ள நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:36 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில்   46 வெள்ள நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
வடகிழக்குப் பருவமழையின்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ச.நடராஜன் மற்றும் பொதுப்பணித்துறை,  மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் உதயகுமார் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் வைகை அணை முழு கொள்ளளவை அடைவது இல்லை.
 ஆனால்  37 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் வைகை அணை முழு கொள்ளளவை அடைந்திருக்கிறது. இதற்கு முன்பு 1962, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் வைகை அணை நிரம்பியுள்ளது.
வைகை அணை நிரம்பியுள்ளதாலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும் பெரியாறு பாசனத்தில் 2.08 லட்சம் ஏக்கர் நிலங்களும், வைகை பூர்வீக பாசனத்தில் 1.36 ஏக்கர் நிலங்களுக்கும் பாசனத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள்களுக்குத் தண்ணீர் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு கட்டங்களாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
 மதுரை மாவட்டத்தில் வெள்ளத்தால்  பாதிக்கக் கூடிய 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலையில் பொதுமக்களைத் தங்க வைக்க 46 அவசர கால தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன. 
இது தவிர 146 தங்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் கால்நடைகளைத் தங்க வைப்பதற்கு 5 பகுதிகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 1,464 கண்மாய்கள் உள்ளன. இவற்றில் 153 கண்மாய்கள் முழு கொள்ளளவை அடைந்துள்ளன. 
178 கண்மாய்களில் பாதி அளவுக்கு மேல் நீர்இருப்பு உள்ளது. நீர்நிலைகள் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளன. நீர்வரத்துக் கால்வாய்களில் தடையின்றி மழைநீர் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார். 
முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசரகால கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர், கூடுதல் ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன் மற்றும் பொதுப்பணித் துறை, மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.