காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தாமிரவருணி ஆறு உற்பத்தி ஆகும் முண்டந்துறை பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதே போல மூல வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு பகுதியையும் புலிகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.
தற்போது வருசநாடு பகுதியில் 1 லட்சம் ஏக்கருக்கும் மேல் வனங்கள் அழிக்கப்பட்டு தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு ஆற்று நீர் தடுக்கப்படுவதால் வைகை அணைக்குத் தண்ணீர் வரத்துப் பாதிக்கப்படுகிறது. தற்போது வைகை அணைக்கு மூல வைகையில் இருந்து தண்ணீர் வருவது இல்லை. முல்லைப் பெரியாறு அணையில் இருந்துதான் தண்ணீர் வருகிறது.
காவிரி ஆற்றில் கரை புரண்டோடிய 172 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. மழைக் காலத்துக்கு முன்பாகவே முறையான திட்டமிடல், தூர்வாரல் பணிகளை மேற்கொண்டிருந்தால் காவிரி ஆறு பயணிக்கும் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கண்மாய்களில் நீரை நிரப்பி 3 ஆண்டுகளுக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தி இருக்க முடியும்.
மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி - வைகை- குண்டாறு திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் இருந்து தப்பித்து பயன்பெற்று இருக்கும். எனவே காலம் தாழ்த்தாமல் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.