தன்னம்பிக்கையோடு ஆன்மிக சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாதா அமிர்தானந்த மயி
நாம் மனதில் தன்னம்பிக்கையோடு ஆன்மிக சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாதா அமிர்தானந்தமயி தெரிவித்தார்.
நாம் மனதில் தன்னம்பிக்கையோடு ஆன்மிக சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாதா அமிர்தானந்தமயி தெரிவித்தார்.
பசுமலை மாதா அமிர்தானந்தமயி மடத்தில் சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி பேசியது:
மனிதன் எண்ணங்கள் மூலம் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. இத்தகைய எண்ணங்கள் தன்னைத் தானே தண்டித்து கொள்வதற்கு சமமாகும்.
அதுபோல நான் எதற்கும் பயனற்றவன் என நினைக்கக் கூடாது. எத்தனை பேரிடம் நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். எத்தனை பேருடைய வாழ்வை நம் அன்பாலும், கருணையாலும் வளம்பெற செய்திருக்கிறோம். இப்படியான செயல்கள் தான் ஒரு மனிதனை உயர்ந்தவனாகவும், செல்வந்தனாகவும் ஆக்குகிறது.
ஒருவன் தன்னை அற்பமானவர் என அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அவரது மனம் அதை நம்பி விடுகிறது. இதனால் அவரது எண்ணம், பேச்சு, செயல் போன்றவற்றில் அவரை அறியாமலேயே பலவீனம் வெளிப்படுகிறது. இதனால் மற்றவர்களும் அவரை பலவீனமானவராக நடத்துவார்கள். எனவே நம்மை நாமே தாழ்வாக எண்ணிக் கொள்ளக் கூடாது. தன்னம்பிக்கையோடு, ஆன்மிக சிந்தனையை வளர்த்து அந்த பாதையில் செல்ல வேண்டும். நமது வாழ்க்கையை நமக்கும் மற்றவருக்கும் பயனுள்ள வகையில் வாழ வேண்டும். கருணை என்னும் கண் மையை கண்களில் தீட்டுவோம். வாய்மை எனும் வண்ணத்தை உதடுகளில் சேர்ப்போம்.
இறையன்பு எனும் ஒளியை இதயத்தில் நிறைத்திடுவோம் என்றார்.
இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.