தொடரும் வேலைநிறுத்தம்: மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 2,500 பேர் கைது
மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 594 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 594 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (ஜாக்டோ - ஜியோ) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இரண்டாவது நாளான புதன்கிழமை தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
4 மையங்களில் போராட்டம்...:
மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி என 4 மையங்களில் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வளாகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் புதன்கிழமை காலை கூடினர். இதனால் அப் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஊரக வளர்ச்சி முகமை வளாகத்தில் திரண்டிருந்த, அரசு ஊழியர் -ஆசிரியர்கள் மத்தியில் ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், செல்வம் உள்ளிட்டோர் போராட்டத்தின் அவசியம் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
போராட்டக்குழு - போலீஸார்
தள்ளுமுள்ளு: அண்ணா பேருந்து நிலைய சந்திப்பு திருவள்ளுவர் சிலை முன்பு மறியல் செய்ய முயன்றனர். அதையடுத்து போலீஸார் சாலைத் தடுப்புகளை வைத்து ஊரக வளர்ச்சி முகமை வளாகத்தில் இருந்து வெளியேற முடியாமல் தடுத்தனர். அதையடுத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் அமர்ந்த பிறகு கைது செய்யுமாறு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். அதைப் போலீஸார் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், தடுப்புகளைத் தள்ளிவிட்டு மறியலுக்குச் சென்றபோது போராட்டக் குழுவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறியலுக்குச் சென்றவர்களை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். மதுரை நகரில் மொத்தம் 1,330 பேர் கைது செய்யப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டியில்...: மேலூரில் பேருந்து நிலையம் அருகே ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 434 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேரையூர் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் 480 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலத்தில் தேவர் சிலை அருகே ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமையில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் உசிலம்பட்டி, செக்கானூரணி, மதுரை விமான நிலையம் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து மறியலில் ஈடுபட்ட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
அலுவலகங்கள் வெறிச்சோடின...: ஜாக்டோ - ஜியோ போராட்டம் காரணமாக வட்டாட்சியர் அலுவலகங்கள் மூடப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு துறைகளிலும் சிலர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால் பொதுப்பிரிவு உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகங்கள் மூடப்பட்டதால், சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பள்ளிகள் மூடப்பட்டன...: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் முழு அளவில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை சில இடங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் மூலமாக பள்ளிகள் செயல்பட்ட நிலையில், அனைத்து மாணவர்களையும் சில ஆசிரியர்களால் கவனிக்க முடியாது என்பதால் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பள்ளிகள் செயல்படவில்லை.
போலீஸார் தாக்கியதால் பரபரப்பு
மதுரையில் சாலை மறியலுக்கு முயன்ற அரசு ஊழியர்கள் சிலரை போலீஸார் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவர்கள் வாகனத்தில் இருந்து மீண்டும் கீழே இறங்கிவர முயன்றபோது அங்கிருந்த போலீஸார் அவர்களை அடித்து தாக்கினர்.
அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாருக்கு எதிராகக் கோஷம் எழுப்பி தர்னா செய்தனர். பின்னர், மாநகரக் காவல் உதவி ஆணையர் அசோகன், போலீஸாரின் செயலுக்கு போராட்டக் குழுவினரிடம் வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு மறியலுக்கு முயன்ற அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.